நகரின் பல இடங்களில் இன்றைக்கு பெண்கள் ஆட்டோவை ஓட்டி செல்லும் நிலையில், இவர்களது வரிசையில் 10 டயர்கள் கொண்ட கனரக லாரியை ஓட்டி பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
பெண்கள் இன்று கால்பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். விவசாயத்திற்கு வயலில் இறங்கியது முதல் ராக்கெட்டில் விண்வெளியில் கால்பதித்தது வரை பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக பெண்கள் இன்றைக்கு திகழ்கின்றனர். அரசியலிலும் இவர்களது பங்கு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் மேற்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர், 10 டயர்கள் கொண்ட கனரக லாரியை ஓட்டி சாதனை படைத்துள்ளார். கூலி தொழிலாளியான ரெங்கையாவின் மனைவியான செல்லம்மாள், 2 மகன்களுக்கு தாயும் ஆவார்.
கணவர் உடல்நலம் குன்றியதால் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்ட செல்லம்மாள், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநர் பயிற்சி உரிமம் பெற்றதோடு, முதலில் சிறிய ரக வாகனங்களை இயக்கி வந்துள்ளார். நாளடைவில் வருமானத்திற்காக கனரக வாகனங்களை ஓட்ட ஆரம்பித்த அவர், இன்றைக்கு 10 டயர் கொண்ட கனரக லாரியை ஓட்டி இந்தியா முழுவதும் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.