புதுடெல்லி:
373 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையே வித்தியாசம் உள்ளது தெரியவந்துள்ளது.
தி குயின்ட் இணையம் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு:
இந்திய தேர்தல் ஆணையத்தால் 2 விதமான எண்ணிக்கை விவரம் தரப்படுகிறது.
வாக்காளர்கள் எண்ணிக்கை, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குப்பதிவு விவரம் இருக்கும்.
முதல் 4 கட்டங்களாக நடந்த 373 தொகுதிகளில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பொருந்திப் போகவில்லை.
* காஞ்சீபுரம் மக்களவை தொகுதியில் 12,14,086 வாக்குகள் பதிவாகியிருப்பதாக வாக்குப்பதிவு இயந்திரம் தரும் விவரமாக உள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் 12,32,417 வாக்குகள் எண்ணப்பட்டதாக காட்டுகிறது.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் இருந்த 18,331 வாக்குகள் எங்கே போனது? இது குறித்த கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் விடை இல்லை.
* தர்மபுரி மக்களவை தொகுதியில் தேர்தல் ஆணையம் கூறிய புள்ளிவிவரத்தின்படி, 11,94,440 வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆனால், 12,12,311 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டதாக வாக்குப் பதிவு இயந்திரம் கூறுகிறது. 17,871 வாக்குகள் எங்கே போனது என்ற கேள்விக்கும் தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை.
* ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் கணக்கின்படி, 13,88,666 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 14,03,178 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டதாக காட்டுகிறது.
14,512 வாக்குகள் எங்கே போயின என்ற கேள்விக்கு பதில் இல்லை.
* உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில், 10,88,206 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், 10,98,112 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டதாக காட்டுகிறது.
9,906 வாக்குகள் என்ன ஆனது என்று கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை.
இந்த 4 மக்களவை தொகுதிகளிலும் அதிக வாக்குகள் முரண்பாடாக உள்ளன.
4 கட்ட தேர்தல் நடந்த 373 மக்களவை தொகுதிகளில் 220-க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசம் உள்ளது.
பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பது குறித்து தி குயின்ட் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.
ஆனால், விளக்கம் தர இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.