டில்லி
பிரதமர் மோடியின் தலைமையில் அமைய உள்ள அமைச்சரவை குழுவுக்கு ஆலோசகர்களாக இளம் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் மத்திய அமைச்சரவை சார்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு குறித்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சி, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவைகளை கவனிக்க உள்ளது.
இந்த குழுவுக்கு உதவ ஆலோசகர்களாக 100 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த ஆலோசகர்களில் 11 பேர் பல்வேறு அமைச்சகத்தை சார்ந்த முன்னாள் அதிகாரிகள் தேர்வு செய்யபட உள்ளனர். அதைத் தவிர இளம் விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக இளைஞர்களிடம் இருந்து அரசு விண்ணப்பங்களை கோரி உள்ளது. இந்த பணிக்கு இந்திய நாட்டினர் அல்லாத திறமை உள்ள இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு வருடமும் புதிய ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வானவர்களின் முதல் பட்டியல் ஜுலை 1 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.