டில்லி:

இந்துக்களின் புனித நதியாக  கருதப்படும் கங்கை நதி  நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உபயோகமற்றது என்று தேசிய  மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.  நதியின் பல இடங்களில் சுகாதார சீர்கேடு காரணமாக கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பதாக தெரிவித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புண்ணிய நதிகளில் ஒன்றான கங்கையில் நீராட ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், கங்கை நதி மிக மோசமாக மாசுபாடு அடைந்துள்ளதாக வும், அதை நேரடியாக குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  கங்கை நதி பாயும் வழியில் 86 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைத்திருந்தோம்.அந்த இடங்களில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கங்கை நதி முழுவதும் வீரியம் மிகுந்த கோலிஃபாம் (coliform bacteria)  பாக்டீரியாக்கள் உள்ளன. அதனால் கங்கை நதியை குடிக்க, குளிக்க பயன்படுத்த இயலாது என்று தெரிவித்து உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதும், கங்கை நதியை சுத்தப்படுத்தும் வகையில், ‘நமாமி கங்கா’ திட்டம்  தொடங்கப்பட்டு அதற்காக 20ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அப்போது மோடி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  அடுத்த  ஐந்து ஆண்டுகளில் இத்திட்டதை செயல்படுத்தி முடிப்பதே இலக்கு என்றும், 1985-ல் இருந்து கங்கை நதியை தூய்மைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கும் ரூ.4,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த முறை மத்திய அரசு தனது இலக்கை அடைவதில் உறுதியாக இருப்பதாகவும்,  கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை திறம்பட முடித்திட கங்கைக் கரையோரம் வாழும் மக்களை பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியது.

மேலும்,  நமாமி கங்கா’ திட்டத்தின் கீழ், கங்கை நதியில் கழிவு நேரடியாக கலப்பது கண்காணிக்கப் படும். கழிவு நீரை சுத்திகரித்து பின்னர் அது நதியில் கலக்க அனுமதிக்கப்படும். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே, சமூக – பொருளாதார நலன் சார்ந்தது. கங்கை நதியை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் லட்சியம் என கூறப்பட்டிருந்தது.

ஆனால், மோடியின் 5ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்து மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இதுவரை கங்கை நதி சுத்தப்படுத்தும் பணி நிறைவடையவில்லை என்பது வெட்கக்கேடு.