புலாதியோன், பாகிஸ்தான்
பாகிஸ்தானில் இஸ்லாமிய கடவுளை நிந்தனை செய்ததாக ஒரு இந்து மருத்துவர் மீது குற்றம் சாட்டி நடந்த கலவரத்தில் பல இந்துகள் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாதியோன் என்னும் இடத்தில் ரமேஷ் குமார் என்னும் விலங்குகள் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த பகுதியில் பல இந்து மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் இங்கு கடைகள் நடத்தி வருகின்றனர். ரமேஷ் குமார் இங்கு புகழ் பெற்ற மருத்துவர் ஆவார்.
அந்த ஊரை சேர்ந்த முகமது இஷாக் நோக்ரி என்பவர் தனது கால்நடைகளுக்காக ரமேஷ் குமாரிடம் மருந்துகள் வாங்கி உள்ளார். அந்த மருந்துகளை ரமேஷ் குரானின் பேப்பர்களில் மடித்து கொடுத்ததாக நோக்ரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அத்துடன் ரமேஷின் மருத்துவமனையில் பல குரான் புத்தகங்கள் கிழிக்கபட்டு கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவரம் பரவியதால் ஊரெங்கும் பதட்டம் ஏற்பட்டது. காவல்துறையினர் ரமேஷ் குமார் மீது தெய்வ நிந்தனை செய்ததாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆயினும் அந்த பகுதி மக்கள் திருப்தி அடையாமல் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த பல இந்துக்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. ராணுவத்தினர் கூட்டத்தினரை கலைத்துள்ளனர். அந்த ஊரில் தற்போது கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.