மைசூரு: கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அடைந்துள்ள படுதோல்வி, அம்மாநில சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமைய்யாவை கடும் நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாரதீய ஜனதா 25 தொகுதிகளை அள்ளிவிட, கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளக் கூட்டணி வென்றதோ 2 இடங்கள் மட்டுமே. காங்கிரசுக்கு கிடைத்தது 1 இடம்.
அம்மாநிலத்தில் காங்கிரசின் மோசமான மக்களவைத் தேர்தல் தோல்வியாக இது பார்க்கப்படுகிறது. சித்தராமைய்யா தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு காய் நகர்த்தி வந்ததால்தான், காங்கிரஸ் மற்றும் தேவகெளடா கட்சியினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இவர் தனது ஆதரவாளர்கள் சிலருக்காக போராடி பெற்ற இடங்களில்கூட, அவர்களை வெற்றிபெற வைக்க முடியவில்லை. எனவே, தற்போதைய நிலையில் கட்சியில் இவரின் செல்வாக்கு பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
இவருக்கு சுத்தமாகப் பிடிக்காத குமாரசாமியை அகற்றிவிட்டு முதல்வர் பதவியில் அமர நினைத்தவர், தற்போதைய நிலையில், அதே குமாரசாமி அரசை பாரதீய ஜனதாவின் அதிரடி ஆபரேஷன்களிலிருந்து காப்பாற்றியே ஆகவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.