ஃப்ரண்ட்ஸ் என்ற படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் கதாப்பாத்திரமான நேசமணி என்ற காதாப்பாத்திரத்தை வைத்து உருவாக்கப்பட்ட #Pray_for_Nesamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக், திடீரென இந்தியளவில் டிரெண்டாகி, தற்போது உலகளவில் டிரெண்டாக தொடங்கியுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த தமிழ் படமான ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலுவின் காமெடி மிகப் பிரசித்தம். அப்படத்தில், ராதாரவியின் அரண்மனையில் மராமத்து பணிகள் செய்யும் ஒப்பந்தத்தை எடுக்கும் வடிவேலுவின் அணியில் வேலை செய்வோரில் ரமேஷ் கண்ணாவும் ஒருவர்.
அவரிடம், தேவையற்ற ஆணிகளைப் பிடுங்குவதற்காக ஒரு சுத்தியலைக் கொடுத்து அனுப்புவார் வடிவேல். “எது தேவையுள்ள ஆணி, எது தேவையில்லாத ஆணி” என்று ரமேஷ் கண்ணா வடிவேலுவிடம் கேட்க, “நீ புடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிகள்தான்” என்று கடுப்பில் பதிலளிப்பார் வடிவேல்.
ஆனால், மாடியில் ஆணி பிடுங்கும் ரமேஷ் கண்ணா, கை தவறி சுத்தியலை கீழே போட்டுவிட, அது கீழே நின்று கொண்டிக்கும் வடிவேலுவின் உச்சந்தலையில் விழ, அவர் மயங்கி விழுந்துவிடுவார்.
இந்த தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்கும் நகைச்சுவை, முன்பு நரேந்திர மோடியுடன் ஒப்பிடப்பட்டு கிண்டலடிக்கப்பட்ட ஒன்றாகும். அதாவது, அவரின் செயல்கள் அனைத்துமே அப்படி உபயோகமற்றவைதான் என்ற அர்த்தத்தில் அந்த நகைச்சுவை ஒப்பிடப்பட்டது.
தற்போது, நரேந்திர மோடி இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்கும் நிலையில், இந்த ஹேஷ்டேக் தமிழகத்திலிருந்து டிரெண்டாகியுள்ளது. அதாவது, மோடி செய்யப்போகும் பயனற்ற மற்றும் தீங்குதரும் செயல்களால் மக்களாகிய நேசமணி படப்போகும் துன்பங்களை உதாரணம் காட்டியே இந்த நகைச்சுவை ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.