சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
சென்னை மெரினா கடற்கரை சாலை மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பைக் ரேஸ் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பைக்ரேசில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில், மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் சிக்கி உள்ளனர். மெரினா கடற்கரை சாலையில் நேற்று இரவு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்கள் சீறிப்பாய்ந்தன. பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து 11 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.