சென்னை
திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் குப்பை மேலாண்மையை சென்னை மாநகராட்சி தனியார் மயமாக்குகிறது.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டதால் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் பகுதிகள் சென்னை எல்லைக்குள் வந்துள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் இந்த பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நகரம் விரிவடைந்துள்ளதால் இந்த ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது.
அதை ஒட்டி சென்னை மாநகராட்சி இந்த நான்கு பகுதிகளுக்கான குப்பை மேலாண்மையை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விளம்பரம் செய்யபட்டுள்ளது. இன்று டெண்டர் திறக்கப்பட்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. தனியார் நிறுவனங்கள் குப்பைகளை அகற்றுவதற்கு பல புதிய விதிகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தற்போது மூன்று சக்கர சைக்கிள் மூலம் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கப்படுவதற்கு பதில் பேட்டரி மூலம் இயங்கும் சிறு வாகனத்தின் மூலம் குப்பை அகற்றப்பட உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள 5000 குறுகலான தெருக்களிலும் இனி குப்பை சேகரிப்பு பணி எளிதாக நடக்கும் என கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் தினம் சுமார் 800 டன்கள் குப்பை சேருவதால் அதை மறு சுழற்சி செய்யும் ஆலைகளும் அமைக்கப்பட உள்ளன.
இந்த தனியார் மயமாக்கும் திட்டம் தற்காலிகமாக சோதனை முறையில் நடத்தப்பட உள்ளது. இது வெற்றி அடைந்தால் மேலும் 8 பகுதிகளுக்கு இதை விரிவாக்கம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலாக்கத்தால் தாமதமாக நிறைவேற உள்ளது.