தண்டலம்:
அதிமுகவினர், காவல்துறையினர் தொடர் மாமுல் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், மனம் உடைந்த பார் உரிமையாளர் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம்முன்பு தீக்குளித்து பலியானார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லையப்பன் என்பவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கப்பெருமாள்கோவில், மாமல்லபுரம் உள்பட சில இடங்களில் அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவரிடம் மேல்வாடகைக்கு டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வருகிறார். பாரில் சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நெல்லையப்பனுக்கு கடன் சுமை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பார் உள்ள பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் உள்பட சில அரசியல் கட்சியினர், காவல்துறையினர் அடிக்கடி மாமுல் கேட்டு தொல்லைப்படுத்தி வந்துள்ளனர்.
இதன் காரணமாக மனமுடைந்த நெல்லையப்பன், மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம் வந்து உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதனால் பலத்த தீ பாதிப்புக்கு உள்ளா அவரை மாமல்லபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது மரணத்திற்கு காரணமாக, செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காயத்ரி தேவியிடம் நெல்லையப்பன் வாக்குமூலம் அளித்தார். அப்போது, தனக்கு தொல்லை கொடுத்தவர்கள் குறித்து கூறியதாக தெரிகிறது.
இந்த குறித்து தகவலறிந்த டிஐஜி தேன்மொழி, எஸ்பி சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக நெல்லையப்பன் தனது முகநூலில் வெளியிட்ட தகவலில், போலீஸார் மற்றும் அரசியல் கட்சியினர் தனக்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து . மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட நெல்லையப்பன் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தார். அவருக்கு மனைவி சுமதி (30), மகள் ருஜன்யா(7), கந்தசாமி என்கிற ஒருமாத ஆண்குழந்தையும் உள்ளனர்.