டில்லி
டில்லி நகரில் நடத்தப்படும் மாசுக்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மரங்கள் நடப்படுகின்றன.
உலகெங்கும் பெரு நகரங்களின் வளர்ச்சிக்காக மரங்கள் வெட்டப்படுவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பெரு நகரங்களில் மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் தலைநகரான டில்லி உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. பல பெரிய நகரங்களில் மழைக் குறைவும் வெப்பம் அதிகரிப்பதும் மரங்கள் இல்லாததால் தான் உண்டாகின்றன.
இதை போக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக டில்லி மாநகராட்சியும் டில்லி பொதுப்பணித்துறையும் இணைந்து சாலைகளை பசுமை மயமாக்க திட்டம் தீட்டி உள்ளன. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த வருடம் மார்ச் மாதம் டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா பசுமை திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் டில்லி நகரில் உள்ள 100 அடிக்கும் மேல் அகலமுள்ள சாலைகள் கொண்டு வரப்பட்டன.
முன்பு சாலை ஓரங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் புற்கள் வளர்க்கப்பட்டிருந்தன. அதை மாற்றி சாலையின் இரு புறங்களிலும் அழகிய பூச்செடிகள், கொடிகள், மரங்கள் வளர்க்க திட்டமிட்ட பொதுப்பணித்துறை இதற்காக சாலை ஓரங்களை சீரமைக்கும் பணியை தொடங்கியது. நகரில் உள்ள காஷ்மீர் கேட் சாலை, பகதூர்ஷா ஜஃபர் மார்க், தீன் தயாள் உபாத்யாய மார்க் உள்ளிட்ட இடங்களின் முக்கிய சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அவைகள் தற்போது ஓரளவு வளர்ந்துள்ளன.
தற்போது இதே பகுதிகளில் உள்ள மற்ற சாலைகளிலும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நகரெங்கும் பல வகையான அழகு மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதற்காக 15 வகை மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த மரங்கள் வளரத் தொடங்கி உள்ளன. இந்த மரங்கள் முழு வளர்ச்சி அடையும் போது கார்பன் மாசுக்கள் குறையும் என கூறப்படுகிறது.
இது குறித்து டில்லி நகர கலை கழகத்தின் முன்னாள் தலைவர் ரவீந்திரன், “இவ்வாறு மரங்கள் நடுவது நகரை அழகு படுத்துவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் ஒரு நல்ல மறுசுழற்சியை அளிக்கும். பட்டாம் பூச்சி போன்ற அழகிய பூச்சிகள், மற்றும் பலவித பறவைகள் வரத் தொடங்கும். அது மட்டுமின்றி மரங்கள் அதிக அளவில் உள்ளது காற்றில் மாசு உண்டாவதை தடுக்கும். சுற்றுச்சூழல் ஆரோக்கியம் அடையும். இது பாராட்டத்தக்க முயற்சி ஆகும்” என தெரிவித்துள்ளார்.