புதுடெல்லி: இந்திய தலைநகரில் வெப்பத்தின் அளவு உச்சத்தை தொட்டுக்கொண்டுள்ளது. வெயிலின் அளவு அடுத்த சில நாட்களில் 45 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டும் என்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன.
வெயிலின் தாக்கம் கடந்த வாரம் சற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உக்கிரமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்தவாரம் பெய்த இடியுடன் கூடிய மழை, மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது.
ஆனால், தற்போது மீண்டும் நிலைமை மோசமாக தொடங்கியுள்ளது. ராஜஸ்தானிலிருந்து வரும் வறண்ட மேற்கு காற்று டெல்லியை அடைவதே இந்த உச்சகட்ட வெப்பத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மே மாதம் 29 முதல் ஜுன் மாதம் 2ம் தேதி வரை, டெல்லியில் வெப்ப அலை சூழல் நிலவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே 27ம் தேதி பகல்நேர வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸ் என்பதாக அதிகரித்தது. அதேசமயம், அந்த நாளின் இரவுநேர வெப்பநிலை 25.4 டிகிரி செல்சியஸ் என்பதாக இருந்தது.