சூரத்:
குஜராத் மாநிலம் சூரத் நகரில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் கீழே குதித்து தப்பினர்.
சூரத் நகரில் உள்ள தாஷிலா என்ற வணிக வளாகத்தில் வெள்ளியன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
4 மாடி கட்டிடம் கொண்ட இந்த வணிக வளாகத்தில் தீ பரவியதும் 19 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
4-வது மற்றும் 5-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்கள் தீவிபத்திலிருந்து தப்பினர்.
பலர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்ததாக குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் தெரிவித்தார்.
இந்த மாணவர்கள் வணிக வளாகத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பாக அனைத்து உதவிகளை அளிக்குமாறு குஜராத் அரசை கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி நடவடிக்கை
சூரத் தீ விபத்துக்குப் பிறகு, தீவிபத்து முன் எச்சரிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆட்சேபம் இல்லா சான்று பெறாத 152 பயிற்சி மையங்களை உடனே மூட வதோதரா மாநகராட்சி உத்தரவிட்டது.