krishnaswamy
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததை கிட்டதட்ட அனைத்து கட்சி தலைவர்களும் எதிர்த்து அறிக்கைவிடுத்திருக்கிறார்கள். “அவசியம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்” என்று கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில், மாறுபட்ட குரலாக ஒலிக்கிறார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
“ஜல்லிக்கட்டு…”  ஆரம்பித்ததுமே, பொங்கி தீர்த்துவிட்டார் மனிதர். இதோ அவரது கருத்துக்கள்:
“முதல் விசயம், ஜல்லிகட்டு மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழர்களின் வீரத்தை பறை சாற்றுகிற விளையாட்டு என்பது போல பேசுவது தவறு. மதுரை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடத்தப்படுவதுதான் ஜல்லிக்கட்டு. இதற்கு ஏன், ஒட்டுமொத்த தமிழகத்தையும், தமிழரின் வீரத்தையும் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை!
நாகரீக காலத்தில் இன்னும் மாடுபிடித்தால்தான் வீரம்  என்று சொல்வது நகைப்புக்கிடமானது. அது மட்டுமல்ல.. நூறு மாடுகளை விட்டால் அதில் இரண்டு மாட்டைத்தான் டச் செய்கிறார்கள் மீதி ஓடிவிடுகின்றன. இதில் என்ன வீரம்?
அது மட்டுமல்ல.. போன வருடம்கூட ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. அதற்காக தமிழர்கள் கண்ணீர்விட்டு அழுது தமிழகமே மூழ்கிவிட்டதா? சாப்பாடு தண்ணீர் இல்லாமல் பட்டினி கிடந்தார்களா?
இப்போது அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டிய விசயம் இதுதானா?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உட்பட பல மாவட்ட மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இன்னமும் அவர்களில் பலருக்கு நிவாரணம் வந்து சேரவில்லை. பலர், இன்னும் தங்களது வீடுகளுக்குச் செல்லமுடியாத நிலையில் தவிக்கிறார்கள். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வந்து சேரவில்லை.. இந்த லட்சணத்தில் ஜல்லிக்கட்டு விவாதம் தேவையா?
விவசாயி, அறுவடை செய்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த நடத்தப்படும் அறுவடை திருநாள்தான் பொங்கல் விழா. ஆனால், இந்த முறை அறுவடையே நடக்கவில்லையே…!
தமிழகத்தில் வீட்டுக்கு ஒருவர் சென்னையில் வசிக்கிறார்கள். சென்னை வெள்ளத்தின் பாதிப்பு தமிழகம் முழுமைக்குமானதுதான்.  மக்கள்  துயரத்தில் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகள், ஜல்லிக்கட்டு தடையை பெரிய விசயமாக ஆக்குகின்றன.
அது மட்டுமல்ல.. இந்த விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே மக்களை ஏமாற்றியிருக்கின்றன. ஜல்லிக்கட்டு நடத்த, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர தடை போட்டுவிட்டார்கள்.
இதை எதிர்த்து மத்திய மாநில அரசுகள் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தே,  ஜல்லிக்கட்டு ரேக்ளா ஆகியவற்றுக்கு அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டது  மத்திய அரசு. இது ஏமாற்று வேலை!  சட்டத்தை உருவாக்கும் அரசு இதையெல்லாம் ஆலோசித்திருக்க வேண்டாமா.
பாஜகவின் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசால் முடியவில்லை.  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. ஜல்லிக்கட்டு நடத்திவிடலாம்” என்கிறார்.\
ஏற்கெனவே, “இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும், ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும்” என்ற சட்டமன்ற தீர்மானங்கள் என்ன ஆனது? நிர்மலாதான் சொல்ல வேண்டும்!
சுருக்கமாகச் சொன்னால், இப்போது நடப்பது, அரசியல் ஜல்லிக்கட்டு! இதனால் மக்களுக்கு எள் முனை அளவும் பயனில்லை!” – ஆவேசமாகச் சொல்லி முடித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.