சென்னை:
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் 23 இடங்களை கைப்பற்றி மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக உயர்ந்துள்ளது.
கடந்த முறை 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மோடியா, லேடியா என்று பாஜகவுக்கு சவால்விட்டு தனித்து தேர்தலை எதிர்கொண்ட ஜெயலலிதா 37 தொகுதிகளில் வெற்றி பெற்று மகக்ளவையில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தார்.
இந்த நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மக்களவையில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தென்மாநிலங்களில் குறிப்பாக, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற 38 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதுச்சேரியிலும் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது.
திமுக 23 தொகுதியில் வென்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றுள்ளது. முதலிடத்தை பாஜக பிடித்துள்ளது. பாஜகவுக்கு303 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து 52 எம்.பி.க்களுடன் காங்கிரஸ் 2வது இடத்தை வகிக்கிறது.
தொடர்ந்து 23 எம்.பி.க்களுடன் திமுக 3வது இடத்தை கைப்பற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து, தலா 22 எம்.பி.க்களுடன் மம்தா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரஸ் மற்றும் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் இடம்பிடித்துள்ளது.