சென்னை:
பரபரப்பான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தோல்விக்கு காரணமான பாஜகவுடன் கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு, கட்சி முடிவு செய்யும் என்று பதில் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18ந்தேதி 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் கடந்த 19ந்தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 2 நாடாளுமன்ற தொகுதிஉள்பட 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
இநத நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விகளை தொடுத்தனர்.
அப்போது தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாலேயே இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்து உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், கூட்டணி என்பது அதிமுகவுன் கொள்கை முடிவு. அதனால், கூட்டணி தொடருமா என்பதை கட்சியே முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து திமுக வெற்றி பெற்று விட்டது என்றும், திமுக ஆட்சி மலரும் என்றார் ஸ்டாலின், ஆனால் அதிமுக ஆட்சி தொடர்கிறது. அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை; அதற்காக அவர் ராஜினாமா செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார்
ஆனால், 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாங்கள்தான் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் எப்போதும் வெளிநடப்புதான் செய்வார்கள். இப்போது தி.முக. எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் அப்படி வெளிநடப்பு செய்யாமல் இருந்தால் சரி
இந்த தேர்தலில் அ.தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் வகையில் மக்கள் வாக்களித்துள்ள னர். எனவே, நாங்கள் கொடுத்த திட்டங்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாகவே எடுத்து கொள்கிறோம்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மாயவேலை செய்து வெற்றி பெற்ற மேஜிக்மேன் என்று சொல்லப்படும் டிடிவி தினகரன் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார். அவர் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் அவரை நிராகரித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க., எங்களிடம்தான் உள்ளது என்பதை தமிழக வாக்காளர்கள் நிரூபித்து விட்டார்கள். இனிமேல் அவரை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.