டில்லி
இன்று இந்திய விமானப்படை நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.
உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை உருவாக்கும் முயற்சியை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். இந்த ஏவுகணை ஒவ்வொரு கட்டமாக வேகம் அதிகரிக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது. இந்த ஏவுகணையை ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்து வருகிறது.
இன்று இந்த பிரமோஸ் ஏவுகணையின் விமானப்படைக்கான ஏவுகணையை இந்திய விமானப்படை சோதனை செய்தது. இந்த ஏவுகணை சு 30 எம்கேஐ ரக படை விமானத்தில் இருந்து ஏவப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக விமானப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணைக்கு இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா ஆகிய நதிகளின் பெயர்களை இணைத்து பிரமோஸ் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது பிரமோஸ் ஏவுகணைகளை கடற்படை, விமானப்பட மற்றும் தரைப்படை ஆகிய மூன்றிலும் கொண்ட ஒரே நாடு இந்தியா என பெயர் பெற்றுள்ளது.