ஈரோடு:
தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சிக்கு வனவிலங்குகளும் தப்பவில்லை. காடுகளில் வசிக்கும் யானை, புலி, மான் போன்ற வன விலங்குகள் தண்ணீர் தேடி ஆற்றுப்பகுதிக்கும், ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் பவானி அருகே உள்ள காடுகளில் வசிக்கும் வன விலங்குகள் தண்ணீர் தேடி அருகிலுள்ள பவானி ஆற்றை நோக்கி கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கி உள்ளன. மேலும் முதுமலையில் வறட்சி காரணமாக உணவு தேடியும், தண்ணீர் தேடியும் சாலையோரங்களில் மான் உள்பட வனவிலங்குகள் உலா வருகின்றன.
சத்தியமங்கலம் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளதாலும், வடக்குப் பகுதி கர்நாடக மாநிலத்திலுள்ள பிலிகிரி ரங்கசாமி வன உயிரின சரணாலயத்தை ஒட்டி இருப்பதாலும் இங்கு கர்நாடக மாநிலத்தில் இருந்தும் முதுமலை வனத்தில் இருந்து யானைகள் இடம் பெயர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு அவ்வப்போது வருவது வழக்கம். தற்போது வனத்தில் கடும் வறட்சி நிலவுவதால், அங்குள்ள பள்ளங்கள், தடுப்பணைகள், வனக்குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் வற்றி விட்டது. இதன் காரணமாக யானைகள் குடிநீருக்காக பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கழுதைபுலி, யானை, கரடி, காட்டெருமை, செந்நாய், மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி ஊர் பகுதிகளில் வரத் தொடங்கி உள்ளது. வனத்துறையினர் வன விலங்குகளாக சில இடங்களில் தண்ணீர் தொட்டி வைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர். ஆனால், அது விலங்குகளுக்கு போதுமானதாக இல்லாத நிலையில், அவைகள் ஊருக்கும் படையெடுக்கத்தொடங்கி உள்ளன.
சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதிகளில் யானைகள் விவசாயி களின் வாழை மற்றும் சோள காட்டில் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று காலை நீலகிரி கிழக்கு சரிவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டமாக பவானி ஆற்றை நோக்கி மெதுவாக நடந்து வந்தன. குட்டிகளுடன் வந்த யானைகள் ஒவ்வொன்றாக பவானி ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டு வந்த வழியே திரும்பி சென்றன.
இதன் காரணமாக பவானி ஆற்றுக்கரையோரம் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர்.