தந்தை பெரியார் ஈரோடு நகரமன்ற தலைவராக இருந்த போது கட்டிய கோட்டை வடிவிலான குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
ஈரோடு நகரமன்ற தலைவராக தந்தை பெரியார் 1917ம் ஆண்டு முதல் 1919ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது ஈரோட்டை சுற்றி உள்ள சிறுசிறு கிராமங்களை ஒருங்கிணைத்து நகராட்சி பகுதியாக மாற்றப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதில் குறிப்பாக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பது பிரதான திட்டமாகும். குடிநீருக்காக குடங்களை தூக்கிக்கொண்டு வீதி வீதியாக மக்கள் அலையாமல் அவர்களின் வீட்டிற்கே தண்ணீர் வரும் வகையில் இந்தியாவிலேயே முதன் முதலாக வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் திட்டத்தை தந்தை பெரியார் செயல்படுத்தினார். இதற்காக ஈரோடு வ.உ.சி.பூங்காவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றும் செய்து ஒவ்வொரு வீடுகளுக்கும் இரும்பு குழாய்கள் மூலம் தடையில்லா குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
குழாய்கள் அமைத்து வீடு வீடாக மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் தந்தை பெரியாரின் குடிநீர் விநியோக திட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் அப்போதைய சேலம் நகர்மன்ற தலைவராக இருந்த ராஜாஜி சேலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அப்போதைய சென்னை மாகாணத்தில் ஆங்காங்கே கொண்டு வரப்பட்டது. தந்தை பெரியாரின் தொலை நோக்கு திட்டத்தில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டியானது இன்றும் கம்பீரமாக ஈரோட்டில் வஉசி பூங்காவில் காட்சியளிக்கிறது. ஆனால் அது குடிநீர் தொட்டிதான் என்பது பலருக்கு தெரியாத வகையில் கோட்டை வடிவில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டிலும் இருந்து வருகின்றது.
ஈரோட்டில் குடிநீர் விநியோகம் 1919ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி தொடங்கப்பட்டதையடுத்து, வருகின்ற 26ம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவுப் பெறுவதையொட்டி திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வருகின்ற 26ம் தேதி ஈரோடு வ.உ.சி பூங்கா வளாகத்தில் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.