கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் குறைவாக காணப்பட்டதால், இன்ற முழுவதுமாகவே படகுசேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஆகவே விடுமுறையை கொண்டாட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பமாக வந்து செல்கின்றனர். சூரிய உதயம், மறைவு, திரிவேணி சங்கமத்தில் நீராடுதல், கடல் அலையை ரசித்தல் என்று காலை தொடங்கி மாலைவரை சுற்றுலா பயணிகள் பொழுதை போக்கி வருகின்றனர். இதே போல் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகின்றனர். இதற்காக பூம்புகார் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினசரி அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்காக நீண்ட கியூ வரிைசயில் நிற்பது வழக்கம். அதேபோல், இன்று காலையும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முன்பு ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட நரேம் காத்து இருந்தனர். அப்போது கடல் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் படகுகள் தரை தட்டி நின்றன. இதையடுத்து படகு சேவை திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடல் நீர் மட்டம் சீரடையாத காரணத்தால், இன்று முழுவதுமாகவே படகு சவாரி சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே காத்து இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.