சென்னை:

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் முடிவடையாத நிலையிலும், வாக்குகள் எண்ணப்படாத சூழலிலும், தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு தேனி மாவட்ட கோவில் ஒன்றில் பதிக்கப்பட்டது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில்,  நாடாளுமன்ற உறுப்பினர் என்று  பெயர் பதிக்கப்பட்டது  எப்படி அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இந்த நிலையில்,  அந்த இடத்தில் வேறு கல்வெட்டு மாற்றி பதிக்கப்பட்டு உள்ளது.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக வேட்பாளராக போட்டி யிட்டார். அவரை எதிர்த்து, திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்கத்தமிழ்ச்  செல்வனும் களமிறக்கப்பட்டனர்.  கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக அனைவரும் காத்துகொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில்  தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள அன்னபூரணி கோயிலில் நேற்று கும்பா பிஷேகம் நடைபெற்றது.  இந்த கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இதர செலவினங்களுக்காக ஓபிஎஸ் குடும்பத்தினர் பெருத்த நிதி உதவி செய்ததாக கூறப்படுகிறது.

அதற்கு நன்றி  விசுவாசமாக கோவில் நிர்வாகத்தினர் கல்வெட்டு ஒன்றை கோவில் சுவற்றில் பதித்தனர். அதில், துணைமுதல்வர்  ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் குமார், ஓ.பி.ஜெயப்பிரதீப்குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த பெயர்களில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட  ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் பெயருடன் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டடிருந்தது.

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  வாக்கு எண்ணிக்கை 23ம் தேதிதான் நடைபெறவுள்ளது. ஆனால், ரவீந்திரநாத் எம்.பி ஆகிவிட்டார். அவர் எப்படி எம்பி ஆனால் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கல்வெட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப்பொருளாகி வருகிறது.

இந்த நிலையில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது போலி மருத்துவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது போல் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேனி தொகுதி வேட்பாளரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடியாக தெரிவித்தார்.

அதுபோல அமமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் , அந்த கல்வெட்டை உடனே அகற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

கடுமையான எதிர்ப்புகள் வெளியானதை தொடர்ந்து, ஆலய நிர்வாகத்தினர்,  அந்த  கல்வெட்டில் இருந்து எம்.பி என எழுதப்பட்ட ரவீந்திரநாத் பெயர் மறைக்கும் வகையில் அந்த இடத்தில் வேறு ஒரு கல்வெட்டை பதித்துள்ளனர்.

இதன் காரணமாக ஓபிஎஸ் மகன் சர்ச்சை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.