லண்டன்:

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்,ஓர் அணி ஓர் இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.


இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஆடுகளம் உருவாக்கப்பட்டு வருவதால், ஒர் இன்னிங்ஸில் ஓர் அணி சராசரியாக 350 ரன்களும், அதிகபட்சமாக 500 ரன்கள் வரையிலும் அடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்கோர் கார்டுகள் 400 ரன்களுக்கானது மட்டும் அச்சடிக்கப்பட்டு வந்தன.

இம்முறை, 500 ரன்கள்  கொண்ட ஸ்கோர் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

லண்டனின் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த வாரம் உலகக் கோப்பைப் போட்டி இயக்குனர் ஸ்டீவ் எவ்வொர்த்தி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இம்முறை 500 ரன்களுக்கான ஸ்கோர் கார்டுகளையும் அச்சடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிரிஸ்டலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது.

இதேபோல், தற்போது சவுத்தாம்டனில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை சேஸிங் செய்த பாகிஸ்தான், 361 ரன்கள் வரை எடுத்தது.

பிரிஸ்டலில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 358 ரன்கள் சேர்க்க, அதை 31 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சேஸிங் செய்தது.

எனவே, பேஸ்மேன்களுக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், 500 ரன்கள் வரை அடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி டாம் ஹாரிஸன் கூறும்போது, இம்முறை ரசிகர்களுக்கு 500 ரன்களுக்குரிய ஸ்கோர் கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். இம்முறை உலகக் கோப்பை ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்றார்.