சென்னை:
தமிழகத்தில் மாம்பழ சீசன் களைக்கட்டத் தொடங்கி உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் அதிக அளவில் மாம்பழம் விளையும் தென்காசி பகுதியில் குளிர்சாதன வசதி கொண்ட மாம்பழம் பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் கடைசி மே, ஜூன் மாதங்களில் தமிழகத்தில் மாம்பழம் விற்பனை அமோக மாக இருக்கும். தமிழகத்தில் 1.70 லட்சம் ஹெக்டேரில் 15 லட்சம் டன் மாம்பழம் விளைவிக்கப்ப டுகிறது. ஆண்டுக்கு 13 லட்சம் டன் மாம்பழம் தமிழகத்தில் கிடைக்கிறது. இதில் பெரும்பாலான மாம்பழகங்கள் ஜூஸ் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு ‘பயன்படுத்தப்படுவதால் உள்ளூரில் அதன் விலை உயர்ந்தே காணப்படுகிறது.
தமிழகத்தில் அதிக பட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விளைச்சம் அதிகம் காணப்படுகிறது. தோத்தாபுரி (பெங்களூரா, கிளிமூக்கு), பங்கனப்பள்ளி, மல்கோவா, அல்போன்ஸா, ருமானி,சப்பட்டா, காலப்பாடு, நீலம் உட்பட 50 வகையான மாம்பழங்கள் தமிழகத்தில் விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் தோத்தாபுரி மாம்பழங்களுக்கு வட மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. மொத்த மாம்பழ வகைகளில் தோத்தாபுரி மட்டும் 70 சதவீதம் நிலப்பரப்பில் விளைவிக்கப்படுகிறது.
அதற்கு அடுத்தபடியாக மக்கள் விரும்பிச் சாப்பிடும் பங்கனப்பள்ளி விளைவிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், கருமந்துறையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய மாம்பழ வகைகளை பாதுகாக்கும் மையம் (Mangoes Genetic Bank) உள்ளது. இங்கு மாம்பழ வகைகளின் தாய்ச் செடி வளர்க்கப்பட்டு, அதன் சிறப்பம்சம் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.
அதுபோல திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. செங்கோட்டை, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி, களக்காடு ஆகிய பகுதிகளில் மாங்காய் உற்பத்தி அதிகம். இம் மாவட்டத்தில் மொத்தம் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் மாமர தோட்டங்கள் உள்ளன. செந்தூரம், நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த் ஆகிய ரகங்கள் பயிரிடப்படுகின்றன.
இங்கு விளையும் மாம்பழங்களை பதப்படுத்த போதிய வசதி இல்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக தென்காசியில், குளிர்சாதன வசதியுடன் மாம்பழம் பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு மாம்பழம் விளைச்சல் அதிகமாக இருப்பதால் மாம்பழங்களின் விலை சரிந்து இருப்பதாகவும், இதன் காரணமாக ஏராளமான பழங்கள் அழுகி வீணாகி வருவதாக வேதனை தெரிவித்தனர். இதனால் தங்களுக்கு அதிக அளவு நஷ்டம் ஏற்படுவதாக கூறும் விவசாயிகள், இதை தடுக்கும் வகையில், அரசு குளிர்சாதன வசதியுடன் கூடிய மாம்பழம் பதப்படுத்தும் மையம் தென்காசி பகுதியில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு இந்த உதவியை செய்தால், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் , அரசு ஆவன செய்யுமா என்று எதிர்பார்க்கின்றனர்.