அகமதாபாத்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடுகள் ஆகியவற்றில் எந்த பாதிப்பும் நேரவில்லை என்பதாக போலியான புள்ளி விபரங்களை தருமாறு, மத்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு, அரசிடமிருந்து நெருக்கடி தரப்பட்டுள்ளதாக கூறுகிறார் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி.

அவர் கூறுவதாவது, “ஜிடிபி குறித்த காலாண்டு தரவுகளை தயவுசெய்து நம்ப வேண்டாம். அவை அனைத்தும் போலியானவை. அப்படி போலியாக வெளியிடச் சொல்லி, மத்திய அரசிடமிருந்து வந்த அழுத்தங்களாலேயே மத்திய புள்ளியியல் நிறுவனம் இப்படியான ஒரு தரவை வெளியிட்டுள்ளது.

இந்த தரவின்படி, அரசு கடந்த 2016ம் ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டு பொருளாதாரத்திலும், ஜிடிபி கணக்கிடுதலிலும் எந்த பாதிப்பும் நேரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல் நிறுவனத்தை என் தந்தைதான் நிறுவினார். நான் சமீபத்தில் அங்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளிடம் விரிவான கேள்விகளைக் கேட்டபோதுதான், அரசு செய்திருக்கும் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது வெளிப்படையான உண்மை. ஆனால், மத்திய அரசு அதை மறைத்து காலாண்டு அறிக்கை வெளியிடுகிறது” என்று குற்றம் சாட்டினார்.