ஆம்ஸ்டர்டாம்: வரும் 2030ம் ஆண்டிற்குள், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றால் இயங்கும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு, ஆம்ஸ்டர்டாம் நகருக்குள் நுழைய தடைவிதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; ஹாலந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வாகனப் புகையால் ஏற்படும் சுகாதார சீர்கேடு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த மாசுபாட்டால், அந்நகரில் வாழும் மக்களின் ஆயுள் சராசரியாக 1 ஆண்டு குறைகிறது.

அடுத்த ஆண்டு முதல், 15 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பயனில் இருக்கும் கார்கள், தலைநகரைச் சுற்றிய ஏ10 வளைய சாலைக்குள் வருவது தடைசெய்யப்படும்.

மேலும், 2022ம் ஆண்டு முதல், அதிகளவு புகையை வெளியிடும் பொதுப் பேருந்துகள் நகரின் மையத்தில் அனுமதிக்கப்படாது.

இதுதவிர, 2025ம் ஆண்டில், நகரின் நீர்ப்பரப்பில் மகிழுந்துகள் செல்ல தடைவிதிக்கப்படுவதோடு, மொபெட்டுகள் மற்றும் இலகு ரக மொபெட்டுகளும் தடைசெய்யப்படும்.

இப்படியாக, வரும் 2030ம் ஆண்டிற்குள் ஆம்ஸ்டர்டாம் நகரம் புகை மாசற்ற நகராக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.