சென்னை:
தமிழகம் முழுவதும் ஜூன் 3ந்தேதி கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு வருடாந்திர ஆய்வு வரும் 15ந்தேதி தொடங்குவதாக வட்டார போக்குவரத்து ஆணையர் (ஆர்டிஓ) அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், பள்ளிக்குழந்தைகளின் வசதிக்காக 28,581 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், வாகனங்களின் கண்டிஷன் போன்றவை குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
வாகனங்களின் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள்,தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.
இந்த ஆய்வு சென்னையில் 15-ம் தேதி தொடக்கி 18ந்தேதி முவடைகிறது. ஆய்வின்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தால் வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எப்.சி) வழங்கப்படாது.
பள்ளி வாகனங்களை அந்தந்தப் பகுதிகளுக்கு உட்பட்ட போக்குவரத்து, காவல் துறை, வருவாய்த் துறை, கல்வித் துறை அதிகாரிகள் சோதனை செய்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தவுள்ளனர். ஆய்வின்போது, குறைபாடு இருந்தால் தகுதிச்சான்று (எப்.சி) வழங் கப்படாது என்றும், குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பென்ட் செய்யப்படும் என ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.