மதுரை:

துரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே ரயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் டிரைவர்களின் சாமர்த்தியதால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு காரணம் மொழிப்பிரச்சினை என்பது தெரிய வந்துள்ளது. தென்னக ரயில்வே முழுவதும் வடமாநிலத்தவர்களை மத்திய அரசு பணியமர்த்தி வருவதால், அவர்களின்  மொழிப் பிரச்சினை காரணமாகவே இந்த தவறு ஏற்பட்டதாகவும், டிரைவர்களின் சாமர்த்தியத் தால்,  ஏராளமான உயிர்கள் பலியாக இருந்த நிகழ்வு அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மதுரையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு செங்கோட்டை பயணிகள் ரெயில் புறப்பட்டது. 5.40 மணிக்கு திருமங்கலம் சென்றடைந்த ரெயில், சிக்னல் கிடைக்காததால் அங்கேயே நிறுத்தப் பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் பயணிகள்  ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததை தொடர்ந்து, ரயில் இயக்கப்பட்டது. ரயில் புறப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே, அதே தண்ட வாளத்தில்  செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு ரெயில் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கவனித்த இரு ரயில்களின் டிரைவர்களும் உடடினயாக வேகத்தை குறைத்ததால், நடைபெற இருந்த பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

ஒரே நேரத்தில் இரு ரயில்கள் எதிரெதிரே வந்ததை கண்ட பொதுமக்கள் அலறி கூச்சல் போட்டனர்.  டிரைவர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக மதுரை கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் பீம்சிங் மீனா, திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயகுமார், கண்ட்ரோலர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம்  செய்து ரெயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  விசாரணையில் பாஷை பிரச்சினை காரணமாகவே இந்த விபத்து நடைபெற இருந்தது தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல தவறுகள் நடைபெறாத வகையில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் இனிமேலாவது தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்களா?