ராமேஷ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தல் ராமேஷ்வரத்தை தொடர்ந்து ஏராளமான சிறுசிறு தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை தற்போது தூரத்தில் இருந்து பார்வையிடும் நிலையில், சில தீவுகளை அருகில் சென்று காணும் வகையில் சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து பைபர் படகுகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக பிரத்யேக படகுகள் வாங்கப்பட்ட நிலையில் விரைவில் படகு சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கோடை விடுமுறை என்பதால், ஏராளமானோர் குடும்பத்தோடு வெளி இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். இந்த நிலையில் ராமேஷ்வரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல், துாத்துக்குடி வரையில் உள்ள கடல் பகுதியில் 21 தீவுகள் அமைந்துள்ளன. இதைக்காண சுற்றுலா பயணிகள் ஆர்வமாக உள்ளனர். தற்போது ஒரு சில மீனவர்கள் தங்களது படகு மூலம் சில தீவுகளுக்கு அழைத்துச் சென்று வருவதை வழக்கமாக உள்ளனர்.
அழகும், பசுமையும், இயற்கை எழில் சூழ்ந்த இந்த கடல் தீவுகளை கண்டுகளிக்கவும், தீவில் இறங்கிப் பார்வையிடவும், கடலுக்குள் உள்ள பவளப் பாறைகள், மற்றும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை நேரில் காணும் பார்வையிடும் வகையில், சுற்றுலாப் படகு போக்குவரத்து துவங்க, மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின காப்பகம், நடவடிக்கைகள் மேற் கொண்டுள்ளது. இதற்காக மத்திய அரசும் சம்மதித்துள்ளது.
இந்தப் படகுப் போக்குவரத்து, ராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் இருந்து துவக்க, ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு, பனை மரத்தில் ஆன, ஜெட்டிப்பாலம், பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ளது.
முதல்கட்டமாக பாம்பன் கடல் பகுதியில் உள்ள 4 தீவுகளை படகுகளில் சென்று பார்க்கும் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் தொடங்க உள்ளனர். இதன் மூலம் குருசடை, புள்ளிவாசல், சிங்கிலி, பூமரிச்சான் தீவுகளை கண்டு ரசிக்க முடியும்.
இந்த பயணத்திற்காக ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக 2 பைபர் ரூ.15 லட்சம் மதிப்பில் பெரிய அளவிலான படகும் வனத்துறையினர் வாங்கியுள்ளனர்.
சுற்றுலா திட்டத்துக்காக பாம்பன் குந்துகால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் குந்துகாலிருந்து 20 பேர் செல்லக்கூடிய பெரிய படகில் குருசடை தீவுக்கு முதலில் அழைத்துச் செல்லப்படுவர். பின்னர் இரு சிறிய கண்ணாடி இழைப்படகுகளில் அருகில் உள்ள 3 தீவுகளுக்கு செல்லலாம். சுற்றுலாப்படகில் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும். கண்ணாடி இழைப்படகின் கீழே கடலில் உள்ள பவளப்பாறைகள், ஜெல்லி மீன்கள், நட்சத்திர மீன்கள் மற்றும் கடல் புற்கள் போன்றவற்றையும் பயணிகள் பார்த்து ரசிக்க முடியும்.
இந்த சுற்றுலா சேவை விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.