சென்னை:
பெரா (அந்நிய செலாவணி மோசடி) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக விரும்புவதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஜெ.ஜெ. தொலைகாட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் ஒளிபரப்பு உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மீதும் காணொலிக் காட்சி மூலமாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கேள்வி விசாரணைக்காக சசிகலா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
அதை எதிர்த்து சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தான் காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராவதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் சசிகலா காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராவதில் எந்த ஆட்சேபமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு சசிகலா காணொலி காட்சி மூலமாக ஆஜராக அனுமதியளித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த விசாரணையின்போது அவர் அளிக்கும் பதில்கள் அடங்கிய கோப்புகளை பெங்களூரு சிறைக்கு அனுப்பி கையெழுத்து பெறவும் நீதிபதி உத்தரவிட்டார்.