டில்லி
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது, இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதை ஒட்டி தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தது.
நேற்று மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜவடேகர், “தற்போது அனைத்து இந்திய மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளன. அதனால் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மற்றொரு மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் நீட் தேர்வு குறித்து கேட்கப்பட்ட போது, “தமிழகம் கல்வியில் பிற மாநிலங்களை விட மிகவும் முன்னணியில் உள்ளது. பல மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டியாக உள்ளது. இத்தகைய நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” என கூறியது குறிப்பிடத் தக்கதாகும்.