டில்லி
இந்திய பொருளாதாரம் கடும் விழ்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் மோடியின் நிதி ஆலோசகர் ரதின் ராய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள உறுப்பினர்களில் ரதின் ராய் ஒருவர் ஆவார். பிரபல நிதி ஆர்வலரான இவர் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்விக்கழகத்தின் இயக்குனரும் ஆவார். தற்போதுள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சகம் நாட்டின் பொருளாதாரம் சற்றே பின்னடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து ரிதின் ராயிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு ரதின்ராய், “கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்தே நமது பொருளாதாரம் ஏற்றுமதியின் அடிப்டையில் வளர்ச்சி பெறாமல் உள்ளது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் இந்தியாவின் 10 கோடி மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியா வளரவில்லை.
தென் கொரியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்றுமதியின் அளவில் பொருளாதார வளர்ச்சி உள்ளன. ஆனால் பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் பொருளாதார வளர்ச்சி உள்ளது. நம்முடைய தற்போதைய பின்னடைவால் இந்தியா இந்நாடுகளை விட கீழே செல்ல வாய்ப்பு உள்ளது.
உண்மையில் இந்த பின்னடைவு மிகவும் அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கி உள்ளது. நமது உள்நாட்டு தேவை குறைந்து ஏற்றுமதி அதிகரிக்கும் போது இந்தியா பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து நான் அரசுக்கு கடிதங்கள் எழுதி உள்ளேன். அதன்படி அரசு ஏற்றுமதியை அதிகரிக்கும் பட்சத்தில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுத்து வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். இவ்வாறு செயல்பட்டால் இன்னும் 5-6 வருடங்களில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்” என பதில் அளித்துள்ளார்.