புனே:
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே அருகே உள்ள பகுதியில் உள்ள ஜவுளி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் பணியாற்றி வந்த 5 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள உருளி தேவாச்சி என்ற கிராமப்புறத்தில் பிரபல நிறுவனத்துக்கு சொந்தமான ஜவுளி குடோன் உள்ளது. இந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அதிகாலை காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. துணி பண்டல்கள் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தன.
இதனால் குடோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். இருந்தாலும் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டதாக கூறப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த 4 வாகனங் களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து குடோனுக்குள் சென்று பார்த்தபோது தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தது தெரிய வந்தது. அவர்களின் உடலை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் கருகி சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.