அமராவதி
தமக்கு பிரதமராகும் ஆசை இல்லை எனவும் மோடிக்கு எதிரான எந்த எதிர்க்கட்சி தலைவரையும் தாம் பிரதமராக ஏற்றுக் கொள்வதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் இருந்தே பாஜகவுக்கு எதிரான அணி அமைப்பதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இருந்து வருகிறார். பிரதமர் பதவிக்கு யாரை முன் நிறுத்துவது என்னும் குழப்பத்தால் அனைவரையும் ஓரணியில் திரட்ட அவரால் முடியவில்லை. இது குறித்து அவர் பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தும் அவரால் கூட்டணியை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது,
தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஆகிய இரு அணிகளும் இல்லாமல் பல மாநிலங்களில் மாநில கட்சிகள் மட்டும் கூட்டணி அமைத்துள்ளன. உதாரணத்துக்கு உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், மேற்கு வங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகியவை குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் மூன்றாம் அணியின் உதவி இன்றி ஆட்சி அமைக்க முடியாது எனவும் முடிவுக்கு வந்துள்ளார். அதை ஒட்டி அவர் கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவருமான பிணராயி விஜயனை சந்தித்து பேசினார்.
சந்திரபாபு நாயுடு தாம் பிரதமராக அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
இதற்கு சந்திரபாபு நாயுடு, “எனக்கு பிரதமராகும் ஆசை கிடையாது. அந்த பதவியில் விருப்பமும் இல்லை. ஏற்கனவே இருமுறை எனக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தது. நான் அப்போது ஐக்கிய முன்னணி அமைப்பாளராக இருந்தேன். இரண்டு முறையும் நான் பிரதமராக மறுத்தேன். அதனால் ஒரு முறை தேவே கவுடா வும் மற்றொரு முரை ஐகே குஜ்ரால் ஆகியோர் பிரதமர் ஆனார்கள்.
மோடி அடிக்கடி எதிர்கட்சிகள் இணைந்தால் யார் அதன் தலைவரக இருப்பார்கள் எனவும் யார் பிரதமர் ஆவார்கள் எனவும் கேள்வி எழுப்புகிறார். எதிரிக்கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும் மோடியை விட வலுவானவர்களே ஆவார்கள். அதனால் அவர்களில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆக முடியும்.அதை நான் ஏற்க தயாராக உள்ளேன்” என பதில் அளித்துள்ளார்.