மதுரை:
மதுரையில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரா ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
மின்தடை காரணமாக அவர்களுக்கு செல்லும் ஆக்சிஜன் வெண்டிலேட்டர் இயங்காததால் அவர்கள் இறந்ததாக இறந்தவர்களின் உறவினர்கள் புகார் கூறி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் செயல்பட்டு வரும் ராஜாஜி மருத்துவமனை தென்மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருந்த வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளியாகவும், ஏராளமானோர் வெளிநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் மதுரையில் பலத்த மழை கொட்டியது. அப்போது, அரசு மருத்துவமனை வளாகத்தல் உள்ள மரம் ஒன்று, மின்கம்பம் மீது விழுந்ததால், மின் தடை ஏற்பட்டது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின் தடையால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் செயல்பட்டு வந்த வெண்டிலேட்டர் இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையில் அவசர காலங்களில் ஜெனரேட்டரை இயக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வரகிறது.