சென்னை:
தமிழகத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 18ந்தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், 13 மாவட்டங்களில் 46 பூத்களில் தவறு நடந்தது தெரிய வந்துள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவின் போது, தேனி, மதுரை உள்பட 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றது தெரிய வந்துள்ளது என்று கூறினார். மேலும், இந்த வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிடும் என்று கூறினார்.
மேலும், யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்குப்பதிவை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்கள் பற்றாக்குறை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தவர், ஈரோடு மற்றும் தேனியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை இருந்தது அதைத்தொடர்ந்தே, தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு 50 பேலட் யூனிட்டும் ஈரோடு தொகுதிக்கு 20 விவிபேட் யூனிட்டும் அனுப்பி வைக்கப்பட்டது. மறுவாக்குப் பதிவுக்கு தயாராக இருப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டது.
வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டது தொடர்பான திமுக புகாருக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்போம் என்றவர், தவறுகள் நடைபெற்ற 46 வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் எனவும் கூறினார். இந்த வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணைய அனுமதிக்கு பின் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.