சென்னை:

தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனியில் உள்ள கம்மவார் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கோவையில் இருந்து மேலும் 50 பெட்டிகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த திமுக, காங்கிரஸ் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என அனைத்து எதிர்க்கட்சியினரும் திரண்டு பெரும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியப்பிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், , ‘‘பொதுவாக பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை ஓர் இடத்தில் இருந்து தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறைதான். தேவை கருதியே அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மற்றும் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.

50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவையில் இருந்து தேனிக்கும் 20 விவிபாட் இயந்திரங்கள் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே பூந்தமல்லியில் ஒரு வாக்குச்சாவடி, கடலூரில் ஒரு வாக்குச்சாவடி, பாப்பிரெட்டிபட்டியில் 8 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 10 வாக்குச்சாவடி களுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ள சூழலில், மேலும் சில வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்.

அப்படி ஒருவேளை கூடுதலாக சில வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டால், இயந்திரங்கள் தேவைப்படும் என்பதால்தான் தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மற்றும் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதைத்தான் செய்கிறோம். இதில் எந்த தவறும் இல்லை. எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பது இதுவரை எங்களுக்கு தெரியாது.

‘இவ்வாறு அவர் கூறினார்.