தேனி:
தேனி பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு கடந்த 18ந்தேதியே முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தேனி நாடாளுமன்ற தொகுதியில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக வேட்பாளராக களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து, திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வனும் போட்டியிட்டனர். கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 18ந்தேதி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
அத்துடன் தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, தேனியில் உள்ள கம்மவார் கல்லூரியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, கோவையில் இருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டுப்பதிவு முடிந்த நிலையிலும், மறு வாக்குப்பதிவு எங்கும் நடைபெற உத்தரவிடப்படாத நிலையிலும், வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் அலுவலரிடம் கேள்வி எழுப்பினர். இதில் ஏதோ மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து கூறிய மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ,இப்படி வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வது வழக்கமான நடைமுறைதான் என்றும் சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வாய்ப்பிருபதால் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.
ஆனால் தேர்தல் அதிகாரியின் கருத்தில் திருப்தியடையாத, திமுக, காங்கிரஸ் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என அனைத்து எதிர்க்கட்சியினரும் திரண்டு பெரும் போராட்டம் நடத்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஓட்டு எண்ணிக்கைக்கான நாள் நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளையில், இப்படி திடீரென வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்தது எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடைசி நேரத்தில் எந்திரங்களை மாற்றி தில்லு முல்லு ஏதும் நடக்க இதுபோன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுகிறார்களோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.