பாட்டியாலா: புலவாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 28 வயது சிஆர்பிஎஃப் வீரர் குல்வீந்தர் சிங்கின் பெற்றோர்களிடம் ரூ.1.5 லட்சத்தை ஏமாற்றிய நபர் குறித்து துப்பு துலங்க முடியாமல் பஞ்சாப் காவல்துறை திணறி வருகிறது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; சிஆர்பிஎஃப் சீருடை அணிந்து, எம்கே மீனு என்ற பெயருடன், கொல்லப்பட்ட குல்வீந்தர் சிங்கின் பணிநிலை சீனியர் என்ற போர்வையில் ஒரு நபர், ரோபார் மாவட்டத்தின் ராவ்லி கிராமத்திலுள்ள குல்வீந்தர் சிங்கின் பெற்றோர் வசிக்கும் வீட்டிற்கு வந்தான்.
தங்களின் ஒரே வாரிசை இழந்த அந்த வயதான பெற்றோர்களின் கவலைகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் நைச்சியமாக பேசிய அவன், சிஆர்பிஎஃப் சார்பாக ஒதுக்கப்பட்டுள்ள எரிவாயு நிரப்பும் ஏஜென்சி உரிமத்தை அந்த வயதான தம்பதியினருக்கு பெற்றுத் தருவதாக உறுதியளித்து, அவர்களிடம் ரூ.1.5 லட்சத்தைப் பெற்றுவிட்டான்.
அவர்களை நம்பச் செய்யும் விதமாக சிலவகை ஆவணங்களையும் அவன் காட்டினான். அவர்களை வங்கி மற்றும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற அவன், பெரியவரான தர்ஷன் சிங்கின் மோட்டார் பைக் மற்றும் செல்ஃபோனுடன் இறுதியில் மாயமாகிவிட்டான்.
இதுகுறித்து பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டாலும், மோட்டார் பைக்கையும், சிஆர்பிஎஃப் சீருடையையும் மட்டுமே மீட்க முடிந்துள்ளது. அந்தக் குறிப்பிட்ட நபரைப் பற்றிய வேறு எந்த தடயமும் இன்னும் கிடைக்கவில்லை.