ஜெய்ப்பூர்: திருமணமாகாமல் கூடி வாழ்ந்த ஒருவர், இணையைப் பிரிந்து, வேறொருவரை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பல்ராம் ஜாக்கர் என்பவர், ஒரு பெண்ணுடன் திருமணமாகாமல் (live-in-partner) கூடி வாழ்ந்தார். ஆனால், அந்தப் பெண்ணைப் பிரிந்து, இன்னொருவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவரின் மனுவில், “என் மனதை தவறான முறையில் மயக்கியும், கட்டாயப்படுத்தியும் என்னிடம் உறவை ஏற்படுத்திக்கொண்டார் பல்ராம் ஜாக்கர்.

மேலும், திருமணம் செய்துகொள்வேன் என்று அவர் உறுதிகொடுத்த காரணத்தினாலேயே நான் என் கணவரை விட்டுப் பிரிந்து, இவருடன் வாழ்ந்தேன். தற்போது, என்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறார். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த ஒரு நபர் அமர்வு, “திருமணமாகாமல் கூடி வாழ்வதென்பது இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை திருமண வாழ்க்கைதான். இதை திருமண வாழ்க்கை என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர, வேறு எந்த வகையிலும் அல்ல. எனவே, பல்ராம் ஜாக்கர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க முடியாது. ஏனெனில், தற்போது உடனிருப்பவரின் வாழ்வை அது பாதித்துவிடும்” என்று தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக, பல்ராம் ஜாக்கர் மற்றும் அவர் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது நீதிமன்றம்.