புபனேஷ்வர்: மே 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல், ஒடிசா தலைநகர் புபனேஷ்வரத்திலிருந்து ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
புயல் கடந்த 24 மணிநேரத்திற்குள் சென்னை முக்கியப் பாதை சீர்செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மே 5ம் தேதி மட்டும், புபனேஷ்வர் – திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் விசாகப்பட்டிணம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் போன்றவை, இணை ரயில்கள் இல்லாததால் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூரி ரயில் நிலையத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், புபனேஷ்வரிலிருந்து பூரிக்கு, வருகின்ற மே மாதம் 10ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, பிரஷாந்தி எக்ஸ்பிரஸ், விசாகா எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், கோனார்க் எக்ஸ்பிரஸ், ஹிராகந்த் எக்ஸ்பிரஸ், புபனேஷ்வர் – யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் புபனேஷ்வர் – புதுடெல்லி சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸ் ஆகியவை, மே 5ம் தேதி முதல் தங்களின் சேவையை மீண்டும் துவங்கிவிட்டதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.