கோவை:

சீறுநீரகம் கிடைக்காமல் நீண்ட காலம் அவதிப்பட்டனர் 3 நோயாளிகள். அவர்களது உறவினர்களின் சிறுநீரகங்கள் பொருந்தவில்லை.

ஆனால், ஒரு நோயாளியின் உறவினரின் சிறுநீரகம் மற்றொரு நோயாளிக்கு பொருந்தியது. இவ்வாறு 3 நோயாளிகளுக்கும் மற்ற உறவினர்களின் சிறுநீரகங்களை டாக்டர்கள் பொருத்தினர்.

இது குறித்து கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை டாக்டர் மங்களகுமார் கூறும்போது, அண்ணனுக்கு சிறுநீரக தானம் செய்ய விரும்பினார் தங்கை. ஆனால், இருவருக்கும் பொருந்தவில்லை.

அடுத்து கணவனுக்கு சீறுநீரகம் தானம் செய்ய மனைவி முன்வந்தார். அதுவும் பொருந்தவில்லை.

மூன்றாவதாக, நோயாளிக்கு அவரது மூத்த சகோதரியின் சீறுநீரகமும் பொருந்தவில்லை.

இதனையடுத்து, கணவனுக்கு தானம் கொடுக்க வந்த மனைவியின் சிறுநீரகத்தை இரண்டாவது நோயாளிக்கும், இரண்டாவது நோயாளியின் சகோதரியின் சிறுநீரகத்தை முதல் நோயாளிக்கும், முதல் நோயாளியின் மூத்த சகோதரியின் சிறுநீரகத்தை மூன்றாவது நோயாளிக்கும் ஒரே சமயத்தில் பொருத்தினோம் என்றார்.

இது குறித்து தமிழ்நாடு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர் அமலோர்பவனாதன் கூறும்போது, இதுபோன்ற சிறுநீரக பரஸ்பர மாற்று அறுவை சிகிச்சை சிறந்த முறைதான். இதுபோல், மற்றவர்களுக்கு சிறுநீரகம் கொடுக்க குறைந்த அளவிலேயே முன் வருகின்றனர்.

பரஸ்பர சிறுநீரக பரிமாற்றம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இதனால் எதிர்வினைகள் ஏதும் இல்லை.

இதுபோல் புதுடெல்லி, மும்பை மற்றும் கேரளாவில் ஏற்கெனவே பரஸ்பர சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை, ஒரே நேரத்தில் 6 சிறுநீரக அறுவை சிகிச்சை நடக்கிறது. இதனால், பரஸ்பர சிறுநீரக தானம் செய்யுமாறு நோயாளிகளின் உறவினர்களை சமாதானப்படுத்த நேரம் இருப்பதில்லை.

இதனாலேயே இங்கு பரஸ்பர சிறுநீரக மாற்றம் செய்ய முடியாமல் போகிறது என்றார்.