மதுரை:

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  தொகுதியில் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதில்,  88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப் பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை கலெக்டர் நாகராஜ்

மதுரை வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரிகள் நுழைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டார். தற்போது, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி நாகராஜன்,  மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை ஆயத்த பணிகளுக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. அங்குள்ள பாதுகாப்பு குளறுபடிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான பணகள் நடைபெற்று வருவதாகவும், இங்கு தேர்தல் பார்வையாளராக ஓம்பிரகாஷ் சாய், தேர்தல் செலவின பார்வையாளராக சதீஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் 37 வேட்பாளர்கள்  போட்டியிடுவதாக தெரிவித்தவர், வாக்குப்பதிவுக்காக 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என இனம் கண்டறியப்பட்டு உள்ளது. வாக்குப் பதிவுக்கு 1,500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதியில்  வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என தெரிவித்தவர், தேர்தலையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்ற வருவதாகவும் கூறினார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.