புதுடெல்லி:

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களின் கணக்கிலிருந்து 8 மாதங்களில் ரூ. 1,772 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வசூலித்துள்ளது.


மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2017-18-ம் ஆண்டின் 8 மாத காலத்தில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களிடம் இருந்து ரூ.1,771.67 கோடி வசூலித்துள்ளது.

இரண்டாவது காலாண்டில் வங்கிக்கு கிடைத்த லாபத்தைவிட இது அதிகம்.

நகர்ப்புறங்களில் ரூ.3 ஆயிரமும், கிராமப்புறங்களில் ஆயிரம் ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக பாரத ஸ்டேட் வங்கி நிர்ணயித்துள்ளது.

இந்த தொகை கணக்கிலிருந்து குறைந்தால், அவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தமோ அல்லது வசூலோ செய்யப்படும்.
இலவச காசோலை, 8 முறை இலவசமாக ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்துதல், இலவச வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமிருந்தும் தினமும் ரூ.2 பிடித்தம் செய்யப்படுகிறது.

அடுத்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 97.34 கோடியும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை ரூ.50 கோடிக்கு மேலாக அதிகமாக குறைந்தபட்ச இருப்புத் தொகைக்காக அபராதம் வசூலித்துள்ளன.

பிரதமரின் ஜன்தன் யோச்னா, சிறு கணக்குகள், அடிப்படை சேமிப்பு வங்கி டெபாசிட், சிறார்கள் மற்றும் அனைத்து சமூக பயனாளிகள் கணக்குகளுக்கு, குறைந்தபட்ச இருப்புத் தொகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.