ஐதராபாத்: வரலாற்று புகழ்மிக்க சார்மினார் கோபுரத்தில் ஏற்பட்ட சிறிய சேதத்தால், ஐதரபாத் மக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்தின் அடையாளச் சின்னமாய் விளங்கி வருகிறது கடந்த 1591ம் ஆண்டில் கட்டப்பட்ட சார்மினார் கோபுரம். குதூப் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த முகமது குவாலி குதூப் ஷா என்ற மன்னரால், 160 அடி உயரத்தில் கட்டப்பட்டதுதான் இந்த சார்மினார்.

சுண்ணாம்பு பூச்சுப் பணியின் ஒரு பாகம் எதிர்பாராமல் தீடிரென கிரானைட் பலகையிலிருந்துப் பிரிந்து, மக்கா மசூதியை நோக்கியிருக்கும் ஒரு ஸ்தூபியின் மீது விழுந்தது. மேலும், அந்நகரில் பெய்த திடீர் மழையால் இது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நொறுங்கிய பகுதிகள் சிதறிய இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர் காவல்துறையினர். ஏராளமான பொதுமக்கள் அவ்விடத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்திய தொல்லியல் துறை சார்பில், சேதமடைந்த அம்சத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சார்மினார் கோபுரத்தைப் பொறுத்தவரை, சுண்ணாம்பு பூச்சு அவ்வப்போது பெயர்ந்து விடுவது வாடிக்கைதான். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள விபத்து என்பது சற்று பெரிய சேதமே.

எனவே, மக்கள் மத்தியிலே அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.