திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மயில் சிலை சேதம் அடைந்துள்ளதால், அது மாற்றப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் மூலவர் சிலைக்கு முன்பு நந்தி சிலையும் அதன் அருகில் இந்திர, தேவ மயில்களின் இரு சிலைகளும் உள்ளன. தொன்மை வாய்நத இந்த மயில் சிலை மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ந்தேதி அன்று இரவு அர்த்தசாம பூஜை முடிந்து கோவிலின் நடை சாத்திய சிசிடிவி இணைப்பை துண்டித்து இரவோடு இரவாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே இருந்த தொன்மை வாய்ந்த சிலை அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக அதே வடிவிலான புதிய மயில் சிலை வைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக அப்போதைய கோவிலின் இணை ஆணையர் பரஞ்சோதி நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தொன்மையான மயில் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் மயிலை தலை மற்றும் வால் பகுதி சேதம் அடைந்ததாக தெரிகிறது. சேதத்தை மறைக்கும் வகையில் மயில் மீது வெள்ளை துணி போட்டு மூடி வைத்திருந்துள்ளனர்
இதுதொடர்பாக ரெங்கராஜன் என்பவர், இந்துசமய அற நிலையத்துறையின் ஆணையர் ஜெயாவுக்கு அளித்த புகாரை தொடர்ந்து, விசாரணைக்கு சென்ற துணைஆணையர் திருமகள் அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவிடம் திருச்செந்தூர் கோவிலின் இணை ஆணையர் பாரதி என்பவர், சிலை மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கோவில் மயில் சிலை மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோவிலின் முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி, சூப்பிரண்டு பத்மனாபன், திருமேனி காவல் பணியாளர்கள் சுரேஷ், ராஜா, குமார், சுவாமிநாதன் ஆகிய 6 பேர் மீது திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில்தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.