போபால்: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாரதீய ஜனதா ஆட்சியமைப்பதை தடுக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும் என்று கூறியுள்ளார் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்.
ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது வேறு; அவர்கள் அமைத்துள்ள கூட்டணி என்பது வேறு. சில இடங்களில் கூட்டணிகள் அமையாமல் போயிருக்கலாம். ஆனால், பாரதீய ஜனதாவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறார்கள்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர விடக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைத்த வெறும் 75 வேலைநாட்களில் நாங்கள் பலவற்றை சாதித்துள்ளோம். விவசாயக் கடன் தள்ளுபடி என்பது அதில் முக்கியமானது.
மாநிலத்தின் சில இடங்களில் செயற்கையான மின்தட்டுப்பாட்டை பாரதீய ஜனதா ஆட்கள் ஏற்படுத்துகிறார்கள். அவர்களின் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களது செயல்பாட்டை மக்கள் பார்த்து வருவதால், கடந்த சட்டமன்ற தேர்தலைப்போல் இருக்காது இந்த நாடாளுமன்ற தேர்தல்.
ஜெய் ஆதிவாசி யுவசக்தி அமைப்பினர் பாரதீய ஜனதா கட்சி வலிமையடையும் வகையில் எதையும் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி தருவதே எங்களின் நோக்கம்” என்றுள்ளார்.