டில்லி

லது சாரி இயக்கமான இந்து சேனை இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை செயலருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

வலது சாரி இயக்கமான இந்து சேனை தனது நடவடிக்கைகள் மூலம் பல பரபரப்புக்களை உண்டாக்கி இருக்கிறது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அன்று இந்து சேனை விக்டோரியா ராணியின் 118 ஆம் நினைவு நாளை கொண்டாடியது. இந்தியாவை முகலாயர் ஆட்சியில் இருந்து விக்டோரியா ராணி மீட்டதாக அப்போது தெரிவித்தது. இதற்கு முன்பே 2017 ஆம் வருடம் அமெரிக்க அதிபர் பிறந்தநாளை கேக் வெட்டி இந்து சேனை கொண்டாடியது.

புர்கா

சென்ற மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அத்துடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் இஸ்லாமியப் பெண்களை போல் புர்கா அணிந்து வந்துள்ளனர். எனவே இலங்கை அரசு புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்துள்ளது.

நிகாப்

உள்துறை செயலர் ராஜிவ் கவுபாவுக்கு இந்து சேனை தேசிய தலைவர் விஷ்ணு குப்தா எழுதி உள்ள கடிதத்தில், “இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்க தேவையான சட்டபூர்வ மற்றும் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

இந்தியாவில் முகத்தை மறைக்கும் உடைகளான புர்கா மற்றும் நிகாப் போன்ற உடைகள் பொது இடங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் அணிந்து வர தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இது போன்ற உடைகள் மூலம் தீவிரவாதிகள் கண்காணிப்பு காமிராவில் தங்களின் முக அடையாளம் தெரியாமல் மறைத்து ஊடுருவுகின்றனர். ஏற்கனவே இலங்கை அரசு தடை விதித்துள்ளது” என கேட்டுக் கொண்டுள்ளார்.

புர்கா என்பது முழு முகத்தையும் மறைக்கும் உடையாகும்.  நிகாப் என்பது முகத்தை மறைத்து கண்களை மட்டும் வெளிக்காட்டும் உடையாகும்.

இது இஸ்லாமியர்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.