டோக்கியோ

பிரபல இந்திய தொழிலதிபரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததால் ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது

இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களான பாம்பே டையிங், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களை பிரபல தொழிலதிபரான வாடியா குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இதன் தலைவர் நுஸ்லி வாடியா ஆவார் இவரது மகன் நெஸ் வாடியா ஆவார். சுமார் 47 வயதாகும் இவர் ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெஸ் வாடியா கடந்த மாதம் விடுமுறைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்றார். அப்போது விமான நிலைய சோதனையில் இவர் 25 கிராம் எடையுள்ள போதைப் பொருளை சட்டைப்பையில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். சோதனையில் பிடிபட்ட இந்த போதைப் பொருளை தமது சொந்த உபயோகத்துக்காக எடுத்துச் செல்வதாக நெஸ் வாடியா தெரிவிதார்.   ஆனால் ஜப்பான் காவல்துறை அதை ஏற்காமல் அவர் மீது வழக்கு பதிந்தது.

ஜப்பானிய சட்டப்படி போதைப் பொருள் வைத்திருப்பது கடும் குற்றமாகும். இந்த வழக்கை விசாரித்த ஜப்பான் நீதிமன்றம் நெஸ் வாடியாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. வாடியா குழும வழக்கறிஞர், ”நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு சிறிது கால அவகாசம் தரப்பட்டுள்ளது.  அதனால் நெஸ் வாடியா உடனடியாக சிறை செல்ல வேண்டியது இருக்காது” என தெரிவித்துள்ளார்.