பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ராஜஸ்தான், பெங்களுரு அணிகளுக்கு இடையே நடை பெற்று வந்த நிலையில், இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப் பட்டது. இதன் காரணமாக பெங்களூரு அணி பரிதாபமாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.
புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி கடைசி இடத்தில் இருந்துவந்த நிலையில், நேற்றைய மழையும் சேர்ந்து பெங்களூரு அணிக்கு சதி செய்துவிட்டதால்,.பெங்களூரு அணி வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஐ.பி.எல். 49வது லீக் போட்டி ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இடையே நேற்று இரவு நடைபெற்றது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தின்போத டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டது. தொடர்ந்து நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் 3 மணி நேரம் தாமதமானது. இதன் காரணமாக 5 ஓவர் கொண்ட ஆட்டமாக குறைக்கப்பட்டது.
இதையடுத்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், டிவில்லியர்சும் இறங்கினர். வருண் ஆரோன் வீசிய தொடக்க ஓவரில் முதல் இரு பந்துகளை கோலி சிக்சருக்கு பறக்கவிட, அதே ஓவரில் டிவில்லியர்ஸ் 2 பவுண்டரி ஓடவிட்டார். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் வீசிய அடுத்த ஓவரில் சிக்சர், பவுண்டரி விரட்டிய விராட் கோலி (25 ரன், 7 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) அதே ஓவரில் கேட்ச் ஆகிப்போனார்.
அடுத்தடுத்த பந்தில் டிவில்லியர்ஸ் (10 ரன்), ஸ்டோனிஸ் (0) ஆகியோரும் கேட்ச் ஆக கோபால் ‘ஹாட்ரிக்’ சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். நடப்பு தொடரில் இது 2-வது ஹாட்ரிக் ஆகும். ஏற்கனவே பஞ்சாப் வீரர் சாம்குர்ரன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், ஒஷானே தாமஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தை அத்துடன் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு தடுக்கப்பட்டது. இதன் காரணமாக பெங்களூரு அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.
பெங்களூரு அணி இத்துடன் 3வது முறை வெளியேறுவது குறிப்பிடத்தக்கது.