டில்லி:

பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறை செயல்பட்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில், மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரத்தின்போது, ராணுவம் மற்றும் மதங்கள் தொடர்பாக பேசி வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சமீபத்தில்  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து பேசிய மோடி இந்து மதத்தை தொடர்புபடுத்தி பேசினார். அதுபோல மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் பேசிய மோடி “ காங்கிரஸ் இந்துக்களை அவமதித்துவிட்டது. மக்கள் இந்த தேர்தலில் அவர்களை தண்டிக்க நினைக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் (இந்துக்கள்) வசிக்கும் தொகுதி யில் போட்டியிடுவதற்கு தலைவர்கள் பயப்படுகின்றனர். சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை யாக உள்ள இடங்களில் போட்டியிடுவது தெளிவாக தெரிகிறது” என்று பேசினார்.

மோடியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்த காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆதாயத் திற்காக, வெறுப்புணர்வு மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசுவதாக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் அக்கட்சி புகார் அளித்தது.

இதுதொடர்பாக  ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசவில்லை என்று தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.